பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் உள்ள ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் புகழ்பெற்ற ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றும் 19 வயது இளம்பெண் ரேணுகா, தனது பிறந்த குழந்தையை தொழிற்சாலை கழிவறையிலேயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சாலையில் வழக்கமான வேலை நேரத்தில் கழிவறைக்குச் சென்ற மற்றொரு ஊழியர், அங்கு ஒரு பையில் ரத்தக்கறையுடன் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் கழிவறையில் எதிர்பாராத விதமாகப் பிரசவித்ததும், பின்னர் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்து பையில் மறைத்து வைத்ததும் தெரியவந்தது.

 

திருமணமாகாத அந்த இளம்பெண், தனது கர்ப்பத்தை குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடம் இருந்து மறைத்து வந்துள்ளார். சமூக அவமானத்திற்குப் பயந்தே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அந்தப் பெண் தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் குணமடைந்த பிறகு கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது. பணியிடங்களில் இளம் தொழிலாளர்களின் மனநலம் மற்றும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் குறித்த விவாதத்தை இச்சம்பவம் மீண்டும் கிளப்பியுள்ளது.