ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அணுசக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரானுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருந்தது.
இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை மற்றும் ஈரான் கப்பல் பறிமுதல் போன்ற காரணங்களால் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் மறுப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருந்த நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும் தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டிக்க முதலில் விருப்பம் காட்டாத அதிபர் டிரம்ப், தற்போது பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதல்களால் பதற்றம் அதிகரித்துள்ள போதிலும், பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமைக்குள் பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியாகப்போகும் அந்த “நல்ல செய்தி” என்னவாக இருக்கும் என்பதை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் அபாயம் தற்காலிகமாக முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.
