ஈரானில் 8 பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாகக் குறிப்பிட்டு, அவர்களை விடுவிப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். 

இதனால் ஈரான் நீதித்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், டிரம்ப் மீண்டும் ஒருமுறை தவறான செய்திகளால் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண்களில் சிலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், மற்றவர்கள் மீதான வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது.

மேலும், அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கூட, அதற்கு சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்படுமே தவிர, மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவதை டிரம்ப் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.