தினமும் நாம் பயன்படுத்தும் சாலை, ஒரு நாளைக்கு இரண்டு முறை கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போனால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே வியப்பாக இருக்கும் இந்தச் சம்பவம், பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி கடற்கரையில் அமைந்துள்ள ‘மாண்ட்-செயின்ட்-மிட்செல்’ என்ற தீவில் நிஜமாகவே நடக்கிறது. இந்தத் தீவிற்குச் செல்லும் பாதை, ஒரு நாளைக்கு இரண்டு முறை கடல் நீரால் முழுமையாகச் சூழப்பட்டு மாயமாகி விடுகிறது.
ஐரோப்பாவிலேயே மிக அதிக அளவு கடல் அலைகள் எழும் பகுதியாக இது அறியப்படுகிறது. கடல் மட்டம் தாழும்போது, பல கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீர் உள்வாங்கி, தீவிற்கு செல்லும் மணல் பாதை அழகாகத் தெரிகிறது. மக்கள் அப்போது நடந்தோ அல்லது வாகனங்களிலோ தீவிற்கு செல்லலாம். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே நிலவின் ஈர்ப்பு விசை காரணமாகக் கடல் மட்டம் 14 முதல் 15 மீட்டர் வரை மளமளவென உயர்கிறது.
அப்போது அந்தப் பாதை முழுமையாக மறைந்து, அந்த இடம் ஒரு தனித்தீவாக மாறுகிறது. சுமார் 1,300 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த அதிசயம், ஆன்மீக ரீதியாகவும் மிக முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. கி.பி 708-இல் கட்டப்பட்ட பழமையான மடாலயம் இன்றும் அங்கு ஒரு வரலாற்றுச் சான்றாக நிமிர்ந்து நிற்கிறது.
