பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் எத்தியோப்பியாவின் ‘டானகில் டிப்ரஷன்’ (Danakil Depression) பகுதிக்குச் சென்று, அங்கிருந்து வீடியோ வெளியிட்ட இந்தியப் பயணியின் துணிச்சலைக் கண்டு இணையவாசிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல பயண வலைப்பதிவர் (Travel Blogger) ஆகாஷ் சௌத்ரி, சமீபத்தில் எத்தியோப்பியாவில் உள்ள ஆஃபார் (Afar) மாகாணத்திற்குச் சென்றார். அங்கு கடல் மட்டத்திலிருந்து 125 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ‘டானகில் டிப்ரஷன்’ பகுதியைத் தனது ‘பாதாள உலகம்’ தொடருக்காகப் படம் பிடித்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Akash Chaudhary (@kaash_chaudhary)

 

இந்த இடம் பூமியின் மிகவும் வெப்பமான மற்றும் ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் சராசரி வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி செல்சியஸாகவும், கோடையில் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியும் பதிவாகிறது. இந்த இடத்தின் ஆபத்து குறித்து ஆகாஷ் பகிர்ந்துள்ள தகவல்கள் அதிரவைக்கின்றன. இங்கு எரிமலைகள் எப்போதும் குமுறிக் கொண்டிருக்கின்றன. ஆகாஷ் அதன் மிக அருகில் நின்று வீடியோ எடுத்துள்ளார்.

மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கொதிக்கும் அமிலக் குளங்கள் இப்பகுதியை வேற்று கிரகம் போலக் காட்டுகின்றன. காற்றில் சல்பர் டை ஆக்சைடு உள்ளிட்ட விஷ வாயுக்கள் கலந்துள்ளதால், இங்கு நீண்ட நேரம் சுவாசிப்பது நுரையீரலைப் பாதிக்கும். தரைப்பகுதி எப்போதும் அதிர்ந்து கொண்டே இருப்பதாகவும், வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து மிக வேகமாக குறைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எரிமலையிலிருந்து வெளிவரும் லாவா குழம்புகளுக்கு அருகில் நின்றுகொண்டு ஆகாஷ் பேசுகையில், “என் உடல் பூமியில் இருக்கிறது, ஆனால் என் மனம் செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார். உள்ளூர் பழங்குடியினரின் உதவியின்றி இந்தப் பகுதிக்குள் நுழைவது தற்கொலைக்குச் சமம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அவரது துணிச்சலைப் பாராட்டுவதை விடவும், பலரும் அவரது பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். “வீடியோவுக்காக உங்கள் உயிரைப் பணையம் வைக்காதீர்கள்”, “உங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, எச்சரிக்கையாக இருங்கள்” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நுண்ணுயிர்கள் கூட வாழ முடியாத அளவுக்குக் கடினமான சூழலைக் கொண்ட இடமாக ‘டானகில் டிப்ரஷன்’ கருதப்படுகிறது.