மறைந்த தனது சகோதரியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், அவரது அஸ்தி மற்றும் எலும்புகளைக் கொண்டு அழகான ‘விண்ட் சைம்’எனும் இசைத் தோரணத்தை உருவாக்கி ஒரு பெண் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் டென்வர் நகரைச் சேர்ந்தவர் எரின் மெரெலி. இவரது சகோதரி ஒரு கலைஞர் (Artist). அவர் உயிருடன் இருந்தபோது மான் கொம்புகள் மற்றும் எலும்புகளைக் கொண்டு இசைத் தோரணங்களை உருவாக்குவதில் வல்லவர். ஒருமுறை எரினுக்குத் தலைமுடி அலங்காரம் செய்து கொண்டிருந்தபோது, “நான் இறந்த பிறகு, எனது உடல் உறுப்புகளை எரிப்பதற்குப் பதிலாக, எனது எலும்புகளைக் கொண்டு நீல நிறத்திலான விண்ட் சைம் ஒன்றை உருவாக்கு. காற்று வீசும் போதெல்லாம் என் நினைவுகள் இந்த வீட்டில் இசையாக ஒலிக்கட்டும்” என்று தனது கடைசி ஆசையைக் கூறியுள்ளார்.
சகோதரியின் மறைவுக்குப் பிறகு, அவரது ஆசையை நிறைவேற்ற எரின் ‘அல்கலைன் ஹைட்ரோலிசிஸ்’ (Alkaline Hydrolysis) எனப்படும் நவீன நீர் தகன முறையைத் தேர்ந்தெடுத்தார். இதில் நெருப்புக்குப் பதிலாக ரசாயனம் கலந்த நீர் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் உடல் சிதைக்கப்பட்டு, இறுதியில் எலும்புகள் மட்டுமே எஞ்சும். இதிலிருந்து கிடைக்கும் திரவம் ‘திரவத் தங்கம்’ (Liquid Gold) என்று அழைக்கப்படுகிறது. இது செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சகோதரியின் கண்கள் நீல நிறத்தில் இருக்கும் என்பதால், அதே நிறத்தில் விண்ட் சைம் உருவாக்க எரின் முடிவு செய்தார். இதற்காகக் கலைஞர் கெல்லி கில்ரன் என்பவரின் உதவியுடன், சகோதரியின் எலும்புத் துகள்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யும் கலவை மூலம் மனித எலும்புக்கூடு போன்ற வடிவத்தை நுணுக்கமாகத் தயாரித்தனர்.
இது குறித்து எரின் கூறுகையில், இந்த விண்ட் சைம் காற்றில் அசையும்போது கிடைக்கும் இசை, எனது சகோதரி இப்போதும் என்னுடன் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. இது வெறும் அலங்காரப் பொருள் அல்ல; என் சகோதரிக்கு நான் செய்த ஆகச்சிறந்த மரியாதை, என உருக்கமாகத் தெரிவித்தார்.
இறந்தவர்களை அடக்கம் செய்வது அல்லது எரிப்பது போன்ற வழக்கமான முறைகளைத் தாண்டி, அவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் இதுபோன்ற படைப்பாற்றல் மிக்க வழிகளை மக்கள் சிந்திக்க வேண்டும் என ‘மரணம் குறித்த கல்வியாளராக’ இருக்கும் எரின் விரும்புகிறார். சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு என்பதோடு மட்டுமல்லாமல், பிரியமானவர்களின் நினைவுகளை என்றென்றும் தங்களுக்கு அருகிலேயே வைத்திருக்க இத்தகைய நவீன முறைகள் உதவுவதாக அவர் கருதுகிறார். மேலும் தற்போது இந்த விண்ட் சைம் எரினின் வீட்டில் தொங்கியபடி, அவரது சகோதரியின் இருப்பை இசையாய் உணர்த்தி வருகிறது.
