மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், சைபர் குற்றவாளிகளின் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ வலையில் சிக்கி ₹12 லட்சத்தை இழக்கவிருந்த தம்பதியை, 81 வயது முதியவர் தனது சமயோசித புத்தியால் காப்பாற்றியுள்ளார். கெமிக்கல் என்ஜினீயராகப் பணியாற்றும் அவரது மகனுக்கு வந்த வாட்ஸ்அப் அழைப்பில் பேசிய நபர், தன்னை ‘மும்பை கிரைம் பிராஞ்ச்’ அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார்.
உங்கள் பெயரில் வந்த பார்சலில் 5 பாஸ்போர்ட்டுகள் மற்றும் போதைப்பொருள் இருந்ததாகக் கூறி, அந்தத் தம்பதியை மிரட்டியுள்ளனர். மேலும், ‘சிக்னல்’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய வைத்து, வீடியோ காலில் போலீஸ் சீருடையில் வந்து மிரட்டி, அவர்களை வீட்டிற்குள்ளேயே ‘டிஜிட்டல் கைதி’ செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டிய மோசடி கும்பல், வழக்கிலிருந்து விடுபட ₹12 லட்சம் பணம் கேட்டுள்ளது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை நடந்த இந்த மிரட்டலால் மகன் பதற்றமடைவதைக் கண்ட 81 வயது தந்தை, அவரிடம் தீர விசாரித்துள்ளார். மகனின் பதற்றத்திற்கான காரணத்தை அறிந்ததும், இது ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி என்பதைப் புரிந்துகொண்ட அவர், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
தந்தையின் இந்த அதிரடித் தலையீட்டால் ₹12 லட்சம் பணம் தப்பியதுடன், மோசடி கும்பலின் திட்டமும் தவிடுபொடியானது. “போலீஸார் யாரையும் ஆன்லைனில் கைது செய்ய மாட்டார்கள்” என்ற விழிப்புணர்வை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
