மகாராஷ்டிராவில் பெட்ரோல் பங்க் ஒன்றில் இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டதும், அவர்களை விலக்கி விடுவதற்குப் பதில் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டியால் மோதியதுமான அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவின் பரபரப்பான பெட்ரோல் பங்க் ஒன்றில் இரண்டு இளம்பெண்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அது கைகலப்பாக மாறியது. கருப்பு நிற ஆடை அணிந்த பெண்ணும், கிரீம் நிற குர்தா அணிந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குர்தா அணிந்த பெண், மற்ற பெண்ணின் முடியைப் பிடித்து கீழே தள்ளி தாக்கினார்.

இந்தச் சண்டையை அங்கிருந்த பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, யாரும் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு ஸ்கூட்டியில் வந்த இளைஞர் ஒருவர், சண்டையை விலக்குவதற்குப் பதில், கருப்பு நிற ஆடை அணிந்த பெண்ணின் மீது தனது வாகனத்தை ஏற்றி மோதினார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், வலியால் துடித்தபடி தனது காலைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தார்.

 

இந்தச் சம்பவம் முழுவதையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ‘X’  தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “இது என்ன சண்டையா அல்லது போர்க்களமா?” என்று சிலர் கிண்டல் செய்தாலும், “ஒரு பெண் கீழே விழுந்து கிடக்கும்போது இளைஞர் ஒருவர் ஸ்கூட்டியால் மோதுவதும், அதை மக்கள் வேடிக்கை பார்ப்பதும் சமூகத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது” எனப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் பொது இடங்களில் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சமின்றி இதுபோன்ற வன்முறைகள் அரங்கேறுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.