பெங்களூருவில் காதலை வித்தியாசமாகச் சொல்லப்போவதாகக் கூறி, காதலனை நாற்காலியில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொன்ற இளம்பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காதலன் தன்னைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெங்களூரு அஞ்சனபுரா பகுதியைச் சேர்ந்த பிரேர்னா (27) மற்றும் கிரண் ஆகிய இருவரும் ஒரு தொலைத்தொடர்பு கடையில் (Telecom Shop) சக ஊழியர்களாகப் பணியாற்றி வந்தனர். கடந்த ஓராண்டிற்கும் மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும், சமீபகாலமாக கிரண் தன்னிடம் சரியாகப் பேசுவதில்லை என்றும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் புறக்கணிப்பதாகவும் பிரேர்னா சந்தேகமடைந்துள்ளார்.
தனது தாய் மற்றும் சகோதரர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிரேர்னா, கிரணை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த அவர், “வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள ஒரு முறையில் உனக்கு எனது காதலைத் தெரிவிக்கப் போகிறேன்” என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய கிரண், அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாற்காலியில் அமர்ந்துள்ளார்.
வித்தியாசமான ‘ப்ரோபோசல்’ என்று கூறி, கிரணின் கண்கள் மற்றும் கைகளை நாற்காலியுடன் சேர்த்து பிரேர்னா கட்டியுள்ளார். கிரண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காதலைச் சொல்லும் ஒரு பகுதி என்று கூறி அவரைச் சமாதானப்படுத்தியுள்ளார். கிரண் அசைக்க முடியாத நிலையில் இருப்பதை உறுதி செய்த பிரேர்னா, தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை அவர் மீது ஊற்றித் தீ வைத்தார்.
கொடூரமான விஷயம் என்னவென்றால், கிரண் தீயில் துடிதுடித்து இறப்பதை பிரேர்னா தனது செல்போன் கேமராவில் வீடியோ எடுத்து ரசித்துள்ளார். இது குறித்து காவல் துறை துணை ஆணையர் டி.எல். நாகேஷ் கூறுகையில், “கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில், காதலன் தன்னைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இக்கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் திட்டமிட்டு இந்தச் சதிச் செயலை அவர் அரங்கேற்றியுள்ளார்” எனத் தெரிவித்தார். இச்சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
