தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை  இல்லாதவர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் 12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் நிலையக் கணக்குப் புத்தகங்கள், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு மற்றும் இந்திய பாஸ்போர்ட் ஆகியவற்றை அடையாளச் சான்றாகக் காட்டலாம்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சகத்தின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓய்வூதிய ஆவணம், மத்திய மாநில அரசுப் பணியாளர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் வாக்களிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனால் வாக்காளர்கள் தங்களது டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் ‘பூத் சிலிப்’ எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு மட்டும் வாக்களிப்பதற்கான அடையாளச் சான்றாக ஏற்கப்படாது என்பதை ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதேபோல், ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே இந்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தவறாமல் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.