கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து ஏற்பட்ட தகராறில், மாமனாரைக் கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தடுக்க முயன்ற மாமியாருக்கும் கத்திக்குத்து விழுந்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகள் கனிமொழிக்கும், காந்தி என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான காந்தி, அடிக்கடி போதையில் வீட்டுக்கு வந்து மனைவி கனிமொழியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவதூறாகப் பேசி வந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மீண்டும் தம்பதிக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த கனிமொழி, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தந்தை செல்வமணி வீட்டிற்குச் சென்றார்.
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதை அறிந்த காந்தி, மதுபோதையில் மாமனார் வீட்டிற்குச் சென்று அங்கு ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது செல்வமணி தனது மருமகனைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காந்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வமணியைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வமணியின் மனைவி லதா, மருமகனைத் தடுக்க ஓடி வந்துள்ளார். ஆனால், போதை தலைக்கேறியிருந்த காந்தி, மாமியார் என்றும் பாராமல் லதாவையும் கத்தியால் குத்தினார். கணவனின் இந்த வெறிச்செயலைக் கண்டு அஞ்சிய கனிமொழி, அருகில் இருந்த வீட்டிற்குள் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வமணி மற்றும் லதாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி செல்வமணி பரிதாபமாக உயிரிழந்தார். லதாவுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள காந்தியைத் தேடி வருகின்றனர். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து மாமனாரைக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
