மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் நளசோப்ரா கிழக்கு பகுதியில் உள்ள வாலைபாடா என்ற இடத்தில், திங்கள்கிழமை மதியம் நிகழ்ந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷி மாதா கோவில் அருகே கார் ஒன்று நிலைதடுமாறி அங்கிருந்த சுமார் 30 முதல் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது.
காரில் இருந்தவர்கள் கிணற்றுக்குள் சிக்கிக்கொண்டு உயிருக்குத் தவித்ததை கண்ட பொதுமக்கள், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். முன்னாள் கார்ப்பரேட்டர் சச்சின் தேசாய் கொடுத்த தகவலின் பேரில், வசாய் விரார் மாநகராட்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
Taxi fell into a well near Santosh Bhavan on Bhalai Pada Road in Nalasopara East#Mumbai | #mumbainews | #FPJ pic.twitter.com/jkT2KwvQLm
— Free Press Journal (@fpjindia) April 21, 2026
சுமார் 40 அடி ஆழமுள்ள அந்த கிணற்றுக்குள் ஏணியை இறக்கி, பாதுகாப்பு பெல்ட்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர். கோடை காலம் என்பதால் கிணற்றில் நீர்மட்டம் மிகக் குறைவாக இருந்ததே, கார் முழுமையாக மூழ்காமல் தடுத்து பெரிய உயிர்ச்சேதத்தைத் தவிர்த்துள்ளது. காயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திறந்தவெளி கிணறுகளைச் சுற்றி முறையான தடுப்புச் சுவர்கள் இல்லாததே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
