ஹைதராபாத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் செல்வந்த வீட்டு சிறுமிகளை குறிவைத்து மிரட்டி பணம் பறித்து வந்த ஒரு கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அர்ஜுன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கும் அல்லது வேலையின் காரணமாக வெளியில் செல்லும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை இன்ஸ்டாகிராம் மூலம் அர்ஜுன் நட்பு ரீதியாக அணுகியுள்ளார்.

பின்னர் அவர்களை ஜூப்ளி ஹில்ஸ் போன்ற ஆடம்பரமான இடங்களுக்கு வரவழைத்து, அவர்களுடன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொண்டு, அவற்றை வைத்து பிளாக்மெயில் செய்து பல லட்சம் ரூபாய் பறித்துள்ளார்.

இந்த குற்றச்செயலில் அந்த சிறுமிகளின் வீடுகளில் பணிபுரியும் வேலைக்காரர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வீட்டின் ரகசியங்கள் மற்றும் சிறுமிகளின் நடமாட்டத்தை அவர்கள் மூலமாகவே அர்ஜுன் தெரிந்துகொண்டிருக்கலாம் என தெரிகிறது.

சைபராபாத் காவல்துறையின் ‘SHE Teams’ இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் சிறுமிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த கும்பலில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.