சேலம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் அதிரடித் திருப்பமாகச் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளரின் மனு தொழில்நுட்பக் காரணங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அங்கு யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விடை கொடுக்கும் வகையில் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள விஜய், “எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் பிரேம்குமார் நமது ரசிகர் மன்றத்தின் நீண்டகால நிர்வாகி. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ‘தொலைக்காட்சிப் பெட்டி’ (TV) சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தனது தொண்டர்களுக்கும் தொகுதி மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், அதிகார பலத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் தவெக வேட்பாளரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வைத்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் விஜய் தனது பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.