தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் நட்சத்திரப் பேச்சாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் ஆகியோரின் மாறுபட்ட நிலைப்பாடுகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரம் செய்த நடிகர் சத்யராஜ், விஜய்யை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.

குறிப்பாக, கடந்த காலங்களில் ‘தலைவா’ திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட சிக்கல்களைக் குறிப்பிட்டு, அப்போது விஜய் வெளியிட்ட வீடியோவைப் போல நடித்துக் காட்டி சத்யராஜ் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை ஒருபுறம் விஜய்யை விமர்சித்துப் பேசி வரும் நிலையில், அவரது மகன் நடிகர் சிபிராஜ் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது ‘X’  பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார். உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

தந்தையின் பேச்சுக்கு எதிராக, விஜய் சொன்ன அதே பாணியிலேயே சிபிராஜ் பதிலளித்திருப்பது அரசியல் மற்றும் திரை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவு தற்போது விஜய் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு  வைரலாகி வருகிறது.

தேர்தல் நேரத்தில் தந்தை ஒரு நிலைப்பாட்டிலும், மகன் மற்றொரு நிலைப்பாட்டிலும் இருப்பது தமிழக அரசியல் களத்தில் சுவாரசியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.