குறுகிய கால வாடகை தங்கும் விடுதிகளில்  அடிப்படை ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு குறைந்து வருவது குறித்த விவாதம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. சமீபத்தில் விடுதி உரிமையாளர் ஒருவர் பகிர்ந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த் என்பவர் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த அந்த வீடியோவில், வாடிக்கையாளர்கள் தங்கிச் சென்ற அறை போர்க்களம் போல காட்சியளிக்கிறது.

வழக்கமான சோதனையின் போது அறைக்குள் சென்ற உரிமையாளர், அங்கிருந்த நிலையைக் கண்டு நிலைகுலைந்து போனார். அறையெங்கும் சிதறிக்கிடக்கும் உணவுக் கழிவுகள், தரை மற்றும் சுவர்களில் படிந்துள்ள கறைகள், கண்ட இடங்களில் வீசப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் என அந்த இடமே ஒரு குப்பை மேடு போல மாறியிருந்தது.

 

இதுகுறித்து அந்த உரிமையாளர் கூறுகையில், “நான் ஒரு வீட்டைப் பகிரும் சேவையை நடத்துகிறேனா அல்லது ஹோட்டல் நடத்துகிறேனா என்றே தெரியவில்லை. அறைக்குள் வீசிய துர்நாற்றம் என்னை குமட்ட வைத்தது” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அந்த வாடிக்கையாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் அளித்த பதில் இன்னும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாக உரிமையாளர் கூறுகிறார். “நாங்கள் தான் சுத்தப்படுத்துவதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டோமே, பிறகு ஏன் நாங்கள் சுத்தம் செய்ய வேண்டும்?” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர்.

சுத்தம் செய்ய வந்த ஊழியர்களே, அந்த அறையின் அவல நிலையைப் பார்த்து பணி செய்ய மறுத்துவிட்டனர். இறுதியில் உரிமையாளரே மற்றொரு ஊழியருடன் இணைந்து அந்த அறையைச் சுத்தம் செய்துள்ளார். இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்த சித்தார்த், “சுத்தம் என்பது வெறும் கட்டணம் சார்ந்தது மட்டுமல்ல, ஒரு மனிதன் தான் அந்த அசுத்தத்தைச் சுத்தம் செய்யப் போகிறான் என்பதை மக்கள் உணர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இதற்குப் பதிலளிக்கும் நெட்டிசன்கள் பலரும், “வெளிநாடுகளுக்குச் சென்றால் சட்டத்திற்குப் பயந்து ஒழுங்காக நடக்கும் இந்தியர்கள், உள்நாட்டில் ஏன் இப்படிப் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். சுத்தம் செய்வதற்கான கட்டணம் என்பது அடுத்த விருந்தினருக்குத் தயார் செய்வதற்கே தவிர, வேண்டுமென்றே அசுத்தம் செய்வதற்காக அல்ல என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.