டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கட்டாய மதமாற்றம் மற்றும் பெண் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான நிதா கான், தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். கடந்த 20 நாட்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்தவர், ரகசியமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நிதா கான் தானே மாவட்டம் மும்ப்ராவில் உள்ள ‘பால்சம் கிளினிக்’ (Balsam Clinic) என்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அந்த கிளினிக்கின் பெண் மருத்துவரிடம் அவர் இரண்டு முதல் மூன்று முறை சிகிச்சை பெற்றுள்ளார். இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, போலீசார் இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி, நிதா கான் அந்த பெண் மருத்துவரிடம் இருந்து மருத்துவச் சான்றிதழைப் பெற்றுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நிதா கான் என்னிடம் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கர்ப்பமாக இருப்பதால் உடல் ரீதியாக மிகவும் பலவீனமாக உள்ளார். அவருக்கு குறைந்தது ஒரு வாரம் முழுமையான ஓய்வு தேவைப்படுகிறது என்றார். இது குறித்து தனியார் ஊடகத்திற்கு  அந்த பெண் மருத்துவரிடம் நேர்காணல் நடத்தியது. அப்போது அவர் கூறியதாவது,

“நிதா கான் என்னிடம் இருமுறை சிகிச்சைக்கு வந்தார். அவர் ஆரம்பக்கட்ட கர்ப்பத்தில் இருந்தார். வயிற்றில் வலி மற்றும் அதிக சோர்வு இருப்பதாகக் கூறினார். அலுவலகத்திற்குச் செல்ல முடியவில்லை என்று கூறியதால், அவருக்கு ஒரு வார ஓய்வுக்கான சான்றிதழை அளித்தேன். ஆனால், அவர் இந்தச் சான்றிதழை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற பயன்படுத்துவார் என்பது எனக்குத் தெரியாது என்றார்.

நிதா கான் தனக்கு மூன்று வார விடுப்புக்கான சான்றிதழ் வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டுள்ளார். ஆனால், நிலைமையைப் பரிசோதித்த மருத்துவர் ஒரு வாரத்திற்கு மட்டுமே சான்றிதழ் வழங்கியுள்ளார். ஒரு சாதாரண நோயாளி போலவே நிதா கான் நடந்து கொண்டதால் தமக்கு சந்தேகம் வரவில்லை என அந்த மருத்துவர் விளக்கமளித்துள்ளார். மேலும் தலைமறைவாக இருக்கும் ஒரு குற்றவாளி, போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, நகருக்குள்ளேயே மருத்துவமனைக்குச் சென்று சான்றிதழ் பெற்று, அதை ஜாமீனுக்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது மகாராஷ்டிர காவல்துறையினரிடையே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.