சொந்த ரத்த பந்தங்களை விட பாசத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காட்டில் நாய்களிடம் சிக்கித் தவித்த ஒரு மான் குட்டியை, விவசாயி ஹனுமான் ராம் மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தார்.
அதற்கு ‘கமல்’ எனப் பெயரிட்டு, தனது சொந்த மகனைப் போலவே வளர்த்தார் அவரது மனைவி கேசர். புட்டிப்பால் புகட்டி, தனியாக ஒரு அறையே ஒதுக்கி வளர்க்கப்பட்ட அந்த மான், அக்குடும்பத்தின் மூன்றாவது பிள்ளையாகவே மாறியது.
ஆனால், தற்போது மான் வளர்ந்து கொம்புகள் முளைக்க ஆரம்பித்ததால், அதன் பாதுகாப்பு கருதி வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
நேற்று வனத்துறையினர் அதனை அழைத்துச் செல்ல வந்தபோது, அக்குடும்பமே துடிதுடித்துப் போனது. குழந்தையைப் பிரிவது போல அந்த மானுக்கு ஆரத்தி எடுத்து, சர்க்கரை ஊட்டி, கழுத்தில் மணி கட்டி வழியனுப்பி வைத்தனர்.
மான் வாகனத்தில் ஏறியதும் சிறுவர்களும், பெண்களும் ஓலமிட்டு அழுத காட்சி அங்கிருந்த அதிகாரிகளையே கண்கலங்க வைத்தது. மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலான இந்த அபூர்வ பாசப் போராட்டம் தற்போது இணையதளங்களில் வைரலாகி பலரை நெகிழச் செய்துள்ளது.
