புதுடெல்லி: இந்தியாவில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் மருந்துகளை வழங்குவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடித் தடை விதித்துள்ளது.
இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டுதலின் (NFI 2026) படி, இந்த மருந்துகளால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், இதயத் துடிப்பில் மாற்றம் மற்றும் தீவிர சோர்வு போன்ற உயிருக்கு ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சளி மருந்துகளில் சேர்க்கப்படும் ‘கோடீன்’ மற்றும் ‘டெக்ஸ்ட்ரோமெதோர்ஃபன்’ போன்ற வேதிப்பொருட்கள் பச்சிளம் குழந்தைகளின் மென்மையான உடலமைப்பிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இருமல் என்பது உடலில் உள்ள கிருமிகளை வெளியேற்ற நடக்கும் ஒரு இயற்கைச் செயல்முறை என்பதால், அதனை மருந்து மூலம் வலுக்கட்டாயமாகத் தடுப்பது விபரீதத்தில் முடியலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இருமல் மருந்துகள் தொடர்பாகச் சமீபகாலமாக எழுந்துள்ள உலகளாவிய பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் உயிரிழப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கூட மருத்துவர்களின் முறையான பரிந்துரையின்றிச் சுயமாக மருந்துகளை வழங்கக் கூடாது என்றும், 5 வயது வரையிலான குழந்தைகளுக்குச் சளி மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இருமல் பாதிப்பு இருந்தால் பதற்றமடையாமல், போதிய அளவு பால் அல்லது தண்ணீர் கொடுத்து உடலை நீரேற்றத்துடன் பராமரிக்க வேண்டும் என்றும், பாதிப்பு தீவிரமாக இருந்தால் உடனடியாகத் தகுதியான குழந்தைப் நல மருத்துவரை அணுக வேண்டும் என்றும் பெற்றோர்களுக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
