உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், மூன்று நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடை ஒன்றிற்குள் 25 வயது இளம்பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோரக்பூரில் ‘யாஷ் பிளக்ஸ்’ (Yash Flex) என்ற கடை இயங்கி வருகிறது. இந்தக் கடை கடந்த மூன்று நாட்களாகப் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், கடையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், சந்தேகமடைந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் நிலையப் போலீஸார், கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு இளம்பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த குமாரி கங்கோத்ரி யாதவ் (25) என்பது தெரியவந்தது. இவர் கோரக்பூரில் தங்கியிருந்து இந்த பிளக்ஸ் கடையை நடத்தி வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக அனில் குப்தா என்ற இளைஞருடன் ‘லிவ்-இன்’ (Live-in) உறவில் கங்கோத்ரி இருந்து வந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக கங்கோத்ரியின் கைபேசி அணைக்கப்பட்டிருந்ததால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள், மகாராஜ்கஞ்சிலிருந்து கோரக்பூர் வந்து தேடியபோதுதான் இந்த விபரீதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கங்கோத்ரியுடன் தங்கியிருந்த அனில் குப்தா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். கங்கோத்ரி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நாள் முதல் அனில் தலைமறைவாக உள்ளார். அவரது கைபேசியும் அணைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது பலமான சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய விசாரணை அதிகாரிகள், “உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவில்தான் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும். கடையின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். தலைமறைவாக உள்ள அனில் குப்தாவைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தனர். மேலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பூட்டிய கடைக்குள் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், கோரக்பூர் வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
