மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர், மேட்ரிமோனியல் தளம் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைபவ் அரோரா என்ற போலிப் பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெண்களிடம் நெருங்கிப் பழகும் இவர், அவர்களைத் தனது காதல் வலையில் வீழ்த்தி வந்துள்ளார். தனது நண்பருக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி பெண்களிடம் பணம் பறிப்பதையே இவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இதுவரை சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல் பெண்களிடமிருந்து இவர் சுருட்டியிருப்பதாக டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், தற்போது ஆனந்தைக் கைது செய்துள்ளனர். இவர் பெண்களைத் தனது வசப்படுத்தியது மட்டுமின்றி, அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்தும் மிரட்டியதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அமராவதியில் அயன் தன்வீர் என்ற வாலிபர் 180 பெண்களை ஏமாற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதைவிடப் பெரிய அளவில் 500 பெண்களைச் சீரழித்த இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இணையதளங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
