உக்ரைன் – ரஷ்யா போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளைத் தனது தாக்குதல் இலக்குப் பட்டியலில் சேர்த்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக ட்ரோன்களைத் தயாரித்து வழங்கும் நாடுகளின் பட்டியலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உக்ரைனுக்காக ட்ரோன்களைத் தயாரிக்கும் ஜெர்மனி, டென்மார்க், லாட்வியா, லிதுவேனியா, நெதர்லாந்து, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களை ரஷ்யா தனது இலக்காக அறிவித்துள்ளது. மேலும், ட்ரோன்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஸ்பெயின், இத்தாலி, இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளும் இந்த வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.
Russian Defense Ministry’s statement must be taken literally: the list of European facilities which make drones & other equipment is a list of potential targets for the Russian armed forces. When strikes become a reality depends on what comes next. Sleep well, European partners!
— Dmitry Medvedev (@MedvedevRussiaE) April 15, 2026
ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் திமித்ரி மெட்வெதேவ் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் எச்சரிக்கையை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உக்ரைனுக்கான ட்ரோன்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் தயாரிக்கப்படும் ஐரோப்பியத் தளங்கள் அனைத்தும் எங்களது ஏவுகணைகளின் இலக்குப் பட்டியலில் உள்ளன. தாக்குதல் எப்போது நடக்கும் என்பது அடுத்தடுத்த நகர்வுகளைப் பொறுத்தது. ஐரோப்பிய நண்பர்களே… அதுவரை நிம்மதியாகத் தூங்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கான ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது, ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தின் ராணுவ மற்றும் அரசியல் சூழலைச் சீர்குலைக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைனுக்குப் பின்னால் இருந்து உதவி செய்யும் ஐரோப்பிய நாடுகள், மெல்ல மெல்ல ரஷ்யாவுடன நேரடிப் போருக்குத் தள்ளப்படுவதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பாவில் தயாராகும் ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்றும், ஐரோப்பியத் தலைவர்கள் தங்கள் நாடுகளை அழிவை நோக்கித் தள்ளுவதாகவும் ரஷ்யா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
