மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் சீனா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், சர்வதேச கடல் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் குறையவில்லை. இந்த வழியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஈரான் முயன்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு 15 கப்பல்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. மற்றொரு பக்கம் அமெரிக்காவும் இந்த வழித்தடத்தைக் கண்காணித்து வருவதால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் 25 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து நடைபெறுகிறது. குறிப்பாக, இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெயில் 40 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகவே வருகிறது. இதனால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்தச் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியை விடப் பெரிய வர்த்தகப் பாதையை முடக்க சீனா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானுடன் எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தென் சீனக் கடலின் நுழைவு வாயிலை மூட சீனா ஆயத்தமாகி வருகிறது.

‘ஸ்கார்பரோ ஷோல்’ (Scarborough Shoal) பகுதிக்கு அருகே சீனா தனது போர்க்கப்பல்களைக் குவித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனா இந்த வழித்தடத்தைத் தடுத்தால், உலக வர்த்தகத்தில் சுமார் 33 சதவீதம் முடங்கும் அபாயம் உள்ளது.

தென் சீனக் கடல் வழியாகத்தான் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெரும்பகுதி வர்த்தகம் நடைபெறுகிறது. ஏற்கனவே இப்பகுதியின் பெரும்பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, தற்போது அதனை முழுமையாக முடக்க முயல்வது சர்வதேச பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் மத்திய கிழக்கில் ஈரான், ஆசியாவில் சீனா என இருமுனை நெருக்கடிகளால் உலக நாடுகள் தற்போது கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.