வழங்கும் ஊதியத்திற்கு ஏற்பவே உழைப்பு” என்ற வினோதக் கொள்கையுடன் அலுவலகத்தில் தூங்கிப் போராட்டம் நடத்திய சீன இளம்பெண், தற்போது வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் ஊழியர்களிடையே நிலவி வருகிறது. அந்த வகையில் சீனாவின் ஷாங்கியூ பகுதியில் ஒரு இளம்பெண் தனது அதிருப்தியைப் பதிவு செய்யப் கையாண்ட முறை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தியின்படி, தனது கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை நிறுவனம் வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டிய அந்தப் பெண், அலுவலக நேரத்திலேயே தனது மேஜையில் படுத்து 5 மணிநேரம் உறங்கியுள்ளார். “நீங்கள் எவ்வளவு சம்பளம் தருகிறீர்களோ, அந்த அளவுக்குத்தான் என்னால் வேலை செய்ய முடியும்” என்பதே அவரது வாதமாக இருந்தது.
தூங்கி எழுந்த பின் அந்தப் பெண் செய்த காரியம் பெரும் விபரீதத்தில் முடிந்தது. தனது மேலதிகாரியின் மேஜையில் இருந்த சாக்லேட்டை எடுத்து அவர் சாப்பிட்டுள்ளார். அந்த அதிகாரிக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறையும் பாதிப்பு (Glucose Intolerance) இருந்துள்ளது. மயக்க நிலை ஏற்படும் போது அவசரமாகச் சாப்பிடுவதற்காக அவர் அந்தச் சாக்லேட்டை வைத்திருந்தார். சரியான நேரத்தில் சாக்லேட் கிடைக்காததால் அந்த அதிகாரி மயக்கமடையும் நிலைக்குச் சென்றுள்ளார்.
சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்ட அவர், “நீ என்னைக் கொல்லப் பார்க்கிறாயா?” என்று அந்தப் பெண்ணை நோக்கிக் கோபமாகக் கேட்டுள்ளார். நிறுவனம் தனக்கு அநீதி இழைப்பதாகக் கூறி அந்த இளம்பெண் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். பொதுமக்களின் ஆதரவு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், ஒருவரின் உடல்நிலையைச் சிதைக்கும் வகையில் நடந்துகொண்ட அந்தப் பெண்ணை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வேலைப்பளு மற்றும் ஊதிய உயர்வுக்காகப் போராடுவது நியாயம். ஆனால், ஒருவரின் உயிருடன் விளையாடுவது ஏற்கத்தக்கதல்ல எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் சீனாவில் வேலைப்பளு குறித்த விவாதங்கள் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நிலையில், இந்தப் பெண்ணின் விசித்திரப் போராட்டம் தற்போது அவருக்கே எதிராகத் திரும்பியுள்ளது.
