பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு உதவும் வகையில், சவுதி அரேபியா சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
மேலும், ஏற்கனவே வாங்கிய 42 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த கூடுதலாக 3 ஆண்டுகள் கால அவகாசமும் அளித்துள்ளது. இந்த அறிவிப்புகள் பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயர்த்தி, பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார உதவி கோருவது மட்டுமின்றி, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கவும் பாகிஸ்தான் பிரதமர் முயற்சி செய்து வருகிறார். தனது பயணத்தின் போது சவுதி மற்றும் கத்தார் தலைவர்களுடன் இது குறித்து அவர் ஆலோசனை நடத்துவார்.
இறுதியாக துருக்கி செல்லும் அவர், அங்கு நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு அதிபர் எர்டோகன் மற்றும் உலகத் தலைவர்களைச் சந்திக்கிறார். பிராந்திய அமைதியை நிலைநாட்டவும், பொருளாதாரத்தை சீரமைக்கவும் இந்தப் பயணம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என நம்பப்படுகிறது.
