கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில், பெற்று வளர்த்த தாயை மகனே கட்டிடத்தின் 4-வது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 வயதான அந்த மூதாட்டி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.

அன்றாடத் தேவைகளுக்காகத் தன்னைச் சார்ந்திருப்பதைச் சுமையாகக் கருதிய அந்தப் பாவி மகன், தனது தாயைக் கொடூரமாகக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று, பக்கவாதத்தால் நடக்க முடியாமல் இருந்த தனது தாயைத் தூக்கிக் கொண்டு 4-வது மாடிக்குச் சென்ற மகன், அங்கிருந்து அவரை இரக்கமின்றி கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். முதலில் இது விபத்து அல்லது தற்கொலை என்று நாடகமாட முயன்ற மகனை, போலீஸார் தங்களது பாணியில் விசாரித்தபோது உண்மை வெளிவந்தது. “தாயின் உடல்நிலை மற்றும் பராமரிப்பால் ஏற்பட்ட விரக்தியே இதற்குக் காரணம்” என்று அவன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.