இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளியின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த காம்ப்ளிக்கு, தற்போது மூளையில் அகற்ற முடியாத ரத்தக்கட்டிகள் (Brain Clot) உருவாகியுள்ளதாகவும், இதனால் அவருக்கு எந்த நேரத்திலும் பக்கவாதம் (Brain Stroke) ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது அவர் மதுப்பழக்கத்தை முழுமையாகக் கைவிட்டிருந்தாலும், மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அவருக்குக் கடுமையான ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது.
தான் மருந்து சாப்பிட்டது மற்றும் புகைபிடிக்கக் கூடாது என்பது போன்ற அடிப்படை விஷயங்களைக் கூட அவர் மறந்துவிடுவதால், அவரது உடல் சமநிலை சீர்குலைந்து வருவதாக அவரது நெருங்கிய நண்பர் மார்கஸ் கூட்டோ வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
காம்ப்ளியின் இந்த இக்கட்டான நிலையில், அவருக்குத் தேவையான உயர் மருத்துவச் சிகிச்சைகளை வழங்கவும், நிதி திரட்டவும் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் இணைந்து குழுவை உருவாக்கி உதவி வருகின்றனர்.
மருத்துவச் செலவுகள் அதிகமாக இருப்பதால், நண்பர்களின் உதவியுடன் தற்போது அவருக்குச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மைதானத்தில் பவுலர்களைத் தெறிக்கவிட்ட தனது பிரியமான அதிரடி ஆட்டக்காரர், மீண்டும் புன்னகையுடன் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
