கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளுக்காக விவாகரத்து கோரி நீதிமன்ற கதவுகளைத் தட்டுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தனது மனைவி நள்ளிரவில் மேக்கப் போடுகிறார் என்ற விசித்திரமான காரணத்தைக் கூறி கணவர் ஒருவர் விவாகரத்து கோரிய வழக்கு, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில், தனது மனைவி நள்ளிரவு 2 மணிக்கு திடீரென எழுந்து காஜல் மற்றும் லிப்ஸ்டிக் போடுவதாகவும், இதன் மூலம் அவர் கடுமையான மனநலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார் என்பது தெரியவருவதாகவும் கணவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனவே, மனரீதியாகப் பாதிக்கப்பட்ட மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது என்றும், உடனடியாக விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த விசித்திரமான வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதிகள், கணவன் கூறிய காரணத்தைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். நள்ளிரவு 2 மணிக்கு ஒரு பெண் காஜல் அல்லது லிப்ஸ்டிக் போடுவதை வைத்து மட்டுமே, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று முடிவுக்கு வந்துவிட முடியாது என நீதிபதிகள் மிக ஆணித்தரமாகத் தெரிவித்தனர்.
மேலும், புதிதாகத் திருமணமான பெண் ஒருவர் இதுபோன்ற விஷயங்களைச் செய்வது இயல்பான ஒன்றுதான் என்றும், இதையெல்லாம் ஒரு காரணமாக வைத்து விவாகரத்து வழங்க முடியாது என்றும் கூறி கணவன் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டனர். பொண்டாட்டியை கழட்டி விட நினைத்துக் கணவர் போட்ட விசித்திரமான விவாகரத்து மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
