ஐரோப்பிய நாடான ஸ்வீடனில், தனது சொந்த மனைவியையே சுமார் 120 ஆண்களுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்த 62 வயது நபரின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரான்சில் உலகையே அதிரவைத்த ‘கிசெல் பெலிகாட்’ வழக்கை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவத்தில், அந்த நபர் தனது மனைவிக்குத் தெரியாமல் போதை மருந்துகளைக் கொடுத்து, மற்ற ஆண்களால் அவர் வன்கொடுமை செய்யப்படுவதை ரகசியக் கேமரா மூலம் கண்காணித்து வந்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த அநாகரீகச் செயல், பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2025 அக்டோபரில் தைரியமாகப் புகாரளித்த பின்னரே உலகிற்குத் தெரியவந்தது. நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், தனது மனைவிக்குத் தற்கொலை மிரட்டல் விடுத்தும், பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன் எனப் பயமுறுத்தியும் அந்த நபர் இந்த வன்கொடுமைகளை அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.

“மனைவியின் சம்மதத்துடன்தான் அனைத்தும் நடந்தது” என அந்த நபர் வாதிட்டாலும், போதை மருந்து கொடுத்ததற்கான ஆதாரங்கள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளன. தற்போது அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 120 நபர்களையும் அடையாளம் காணும் பணியில் ஸ்வீடன் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.