உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், மனிதநேயமற்ற முறையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி இரவு, ஷாலிமார் கார்டன் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் அந்தச் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையிலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அந்தச் சிறுமி மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. குழந்தையின் கழுத்து மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் ஆழமான காயங்கள் இருப்பது அதிகாரிகளை நிலைகுலைய வைத்துள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது அந்தச் சிறுமியின் சொந்த மாமாவான ‘ஜமீல்’ என்பது தெரியவந்துள்ளது. சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த வெறிச்செயலை அரங்கேற்றிய ஜமீல், பின்னர் சடலத்தை ஒரு காருக்கு அடியில் வீசிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

இந்தத் தகவல் பரவியதும் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்களும் உறவினர்களும் ஜமீலை உடனடியாகக் கைது செய்யக் கோரி வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் காமக் கொடூரன் ஜமீலை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு பிஞ்சுக் குழந்தைக்குச் சொந்த உறவே எமனாக மாறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.