சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்ததற்கு மத்திய அரசை விஜய் குற்றம் சாட்டுகிறார்.

ஆனால், உண்மையில் அவருடன் இருக்கும் ஒரு ‘திருடன்’ தான் அந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறார்” என சரத்குமார் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அணுகுண்டாக வெடித்துள்ளது. மேலும், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “பாஜக எப்போதுமே யாருடனும் கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்வது கிடையாது.

விஜய் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது” என கூறினார். விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை விமர்சித்த சரத்குமார், “41 பேர் இறந்தபோது அவர்களின் வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரிக்காமல், அவர்களைத் தனது இடத்திற்கு வரவழைத்துப் பார்த்த உலகிலேயே ஒரே தலைவர் விஜய்தான்” எனச் சாடினார்.

ஒரு தலைவன் என்பவர் சோதனை காலத்தில் மக்களின் அருகில் இருக்க வேண்டுமே தவிர, அவர்களைத் தன்னருகே வரவழைக்கக் கூடாது என அறிவுரை வழங்கினார். எந்தவொரு கொள்கையும் இல்லாத தவெக, வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும் என்றும், இளைஞர்களைத் திசை திருப்பும் செயல்களை விஜய் கைவிட வேண்டும் என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.