குஜராத் மாநிலம் பஞ்சாயத்துத் தேர்தலில், பைபெரோ தொகுதியில் பாரத் சிங் வகாலா என்ற வேட்பாளர் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மூன்று பிரதான கட்சிகளின் சார்பிலும் வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு வேட்பாளர் ஒரு கட்சியின் சார்பாகவே போட்டியிடும் நிலையில், இவர் மூன்று வெவ்வேறு கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மனு தாக்கல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
அடிக்கடி கட்சி மாறும் பின்னணி கொண்ட வகாலா, கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு பாஜகவுக்கு கடும் சவாலாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 வேட்புமனுக்களில், மூன்று முக்கிய கட்சிகளும் ஒரே நபரைத் தங்கள் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது ஒரு விசித்திரமான நிர்வாகச் சிக்கலை உருவாக்கியுள்ளது.
தேர்தல் விதிகளின்படி, வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான 15ஆம் தேதியன்று, எந்தக் கட்சி அவருக்கு அதிகாரப்பூர்வமான ‘பி’ படிவத்தை வழங்குகிறது என்பதைப் பொறுத்தே அவர் எந்தக் கட்சியின் வேட்பாளர் என்பது முடிவாகும். குஜராத் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியும், முடிவுகள் ஏப்ரல் 28, 2026 அன்றும் அறிவிக்கப்பட உள்ளன.
