உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரியில், மருத்துவரின் கவனக்குறைவான சிகிச்சையால் 5 வயது சிறுமி ஒருவரது கால் துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025 டிசம்பரில் மாடியிலிருந்து விழுந்ததில் சிறுமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது சிகிச்சையளித்த உதவிப் பேராசிரியர், சிறுமியின் காலை மிக இறுக்கமாகக் கட்டி வைத்துள்ளார். இதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டம் தடைபட்ட நிலையில், தொற்று தீவிரமடைந்து சிறுமியின் உயிருக்கே ஆபத்தான சூழல் உருவானது. இதையடுத்து சிறுமி லக்னோவிற்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமியின் உயிரைக் காப்பாற்ற காலையே அகற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
தவறான சிகிச்சையால் தனது மகள் வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளியாக மாறிவிட்டதாகக் கூறி, சிறுமியின் தந்தை அனில் குமார் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட மருத்துவ விசாரணையில் மருத்துவரின் அலட்சியம் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
