ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட அந்நாடு மறுப்பதே இந்தப் பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், “ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்று அலட்சியமாகத் தெரிவித்திருப்பது அனலை கிளப்பியுள்ளது. ஆனால், அமெரிக்காவின் இந்த மிரட்டல் போக்கிற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஈரான் அதிபர், “அமெரிக்கா தனது சர்வாதிகாரப் போக்கை கைவிட்டு, ஈரான் மக்களின் உரிமைகளை மதிக்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே ஓர் உடன்பாட்டை எட்ட முடியும்” எனச் சாடியுள்ளார்.

மேலும், சமரசத்திற்காகப் போராடிய தனது குழுவினரைப் பாராட்டியுள்ள அவர், அமெரிக்கா தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானின் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராக்சியும், “நாங்கள் நம்பிக்கையுடன் தான் பேச்சுவார்த்தைக்குச் சென்றோம், ஆனால் அமெரிக்கா அதனைத் திட்டமிட்டு சீர்குலைத்துவிட்டது” என வேதனை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல், மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்களைச் சூழச் செய்துள்ளது.