ஸ்வீடன் நாட்டில் தனது மனைவியைப் போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி, சுமார் 120-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ள கட்டாயப்படுத்திய 61 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உலகையே உலுக்கிய பிரான்ஸ் நாட்டின் ‘டொமினிக் பெலிகோ’ சம்பவத்தைப் போன்றே இந்த கொடூரமும் அரங்கேறியுள்ளது.
அதாவது ஸ்வீடனின் கிராம்ஃபோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பண்ணை வீட்டில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. குற்றம் சாட்டப்பட்ட நபர், ஆன்லைன் மூலமாக ஆண்களைத் தொடர்பு கொண்டு, பணம் பெற்றுக்கொண்டு அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். மனைவியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வீடு முழுவதும் ரகசிய கேமராக்களையும் அவர் பொருத்தியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனைவியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவருக்குத் தொடர்ந்து போதைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கணவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், உயிருடன் எரித்து விடுவதாகவும் அல்லது விரல்களைத் துண்டித்து விடுவதாகவும் கொடூர மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சித்திரவதை கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2025 அக்டோபர் மாதம் வரை நீடித்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் இதுவரை 120 ஆண்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 28 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீட்டில் இருந்த ரகசிய கேமராக்களில் பதிவான வீடியோக்கள் நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட உள்ளன. நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள அந்த நபர், இவை அனைத்தும் மனைவியின் சம்மதத்துடனேயே நடந்ததாக வாதிட்டுள்ளார். இருப்பினும், அந்தப் பெண் அளித்துள்ள சாட்சியங்களும், வீடியோ ஆதாரங்களும் கணவரின் குரூர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளன.
மேலும் இந்தச் சம்பவம் ஸ்வீடன் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
