ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை அவரது சகோதரர் குருணால் பாண்டியா கொண்டாடிய விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 240 ரன்கள் குவித்தது.

மேலும் கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜேக்கப் டஃபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி அணிக்காக விளையாடும் குருணால் பாண்டியா, தனது தம்பியின் விக்கெட்டை மிகவும் ஆக்ரோஷமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடினார்.

இந்தச் சம்பவம் பாண்டிய சகோதரர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது. மைதானத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோதும், போட்டி முடிந்த பிறகு கை குலுக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பொதுவாக மைதானத்திற்கு வெளியேயும் உள்ளேயும் மிகுந்த பாசத்துடன் காணப்படும் இவர்களுக்குள் தற்போது நிலவும் இந்தத் தீவிரமான போட்டி மனப்பான்மை மற்றும் மோதல் போக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், “யாராவது ஒரு பாண்டியா தான் வெற்றி பெற வேண்டும், இன்று நான் அதிர்ஷ்டசாலி” என்று குருணால் போட்டிக்குப் பிறகு விளையாட்டாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.