புதுச்சேரி மாநில மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நாளை முதல் டீ மற்றும் காபி விலையை உயர்த்துவதாக உணவக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவி வரும் வர்த்தக எரிவாயு (Commercial Cylinder) சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சாதாரண சாமானிய மக்கள் அன்றாடம் அருந்தும் தேநீர் விலை மளமளவென உயரப் போகிறது.
நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விலை பட்டியலின்படி, இதுவரை 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கப் டீ 20 ரூபாயாகவும், 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபி 30 ரூபாயாகவும் உயர்கிறது. இதுமட்டுமின்றி, 50 ரூபாய்க்கு வழங்கப்பட்ட பார்சல் டீ மற்றும் காபி இனி 60 ரூபாய்க்கு விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் தவித்து வரும் நிலையில், டீ கடையிலும் கூடுதல் சுமை ஏறியிருப்பது புதுச்சேரியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
