தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணத்தை மூன்றே வரிகளில் நையாண்டி செய்தார். “காலில் விழுந்தோம், காலை வாரிவிட்டோம், அடுத்த காலை நோக்கிப் போவோம்” என்பதுதான் பழனிசாமியின் மொத்த அரசியல் வாழ்க்கை என்று அவர் விமர்சித்தார். தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கு எதிரான ‘ஒற்றை கலாச்சாரம்’ பேசும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்று ஸ்டாலின் எச்சரித்தார்.
அதனால்தான் 2021-ல் ‘அடிமை ஆட்சி’யை மக்கள் தூக்கியெறிந்ததாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் நிதி நெருக்கடிகளையும் மீறி திமுக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகக் கூறினார். 2026 தேர்தல் என்பது தமிழகத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கான தேர்தல் என்றும், அதற்கான திட்டங்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக இருப்பதாகவும் அவர் ஆவேசமாக முழங்கினார்.
