பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கடந்த கால ஆட்சியைக் கடுமையாகச் சாடினார். பழனிசாமியின் ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு, சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் ஆகிய சம்பவங்களை வரிசைப்படுத்திக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
”இவ்வளவு தவறுகளைச் செய்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்கவே பாஜகவின் ‘வாஷிங் மெஷினில்’ பழனிசாமி சரணடைந்துள்ளார்” என்று விமர்சித்த முதல்வர், தனது பிழைகளை மறைக்கத் தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லிக்கு அவர் அடகு வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுகவிற்குப் போடும் ஒவ்வொரு வாக்கும் மறைமுகமாக பாஜகவிற்கே போய் சேரும் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என்று எச்சரித்த ஸ்டாலின், அதிமுக-பாஜக இடையிலான உறவை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தினார்.
