மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்குள்ள உயர் அதிகாரிகளால் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமைக்கும், மதமாற்ற முயற்சிக்கும் ஆளாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 9 இளம்பெண்கள் துணிச்சலுடன் முன்வந்து அளித்த புகாரின் பேரில், தானிஷ் ஷேக், தௌசிப் அத்தார், நிதா கான் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 25 வயது இளம்பெண் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், தனது மேலாளர் தௌசிப் அத்தார் என்பவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதோடு, தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி மிகக் கொடூரமான முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மேலும், கார்ப்பரேட் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களைத் தனிப்பட்ட முறையில் சுற்றுலா மற்றும் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களை ரகசியமாக வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. “வேலைக்குச் சென்ற இடத்தில் எனது மதத்திற்கு எதிராக வெறுப்பைப் பரப்ப முயன்றனர். அங்கு வேலையை விட ஜிகாத் தான் அதிகம் விதைக்கப்பட்டது” எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய ஐடி நிறுவனத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய கும்பல் கைவரிசை காட்டியிருப்பது கார்ப்பரேட் துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
