புனித நதியாகக் கருதப்படும் கங்கை நதியில், 165 லிட்டருக்கும் அதிகமான தூய நெய்யைப் பக்தர்கள் ஊற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒருபுறம் இது மதச் சடங்கு எனக் கூறப்பட்டாலும், நதியின் சுற்றுச்சூழல் இதனால் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூல வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், ஒரு கும்பல் படகில் பெரிய அளவிலான கேன்களில் நெய்யை ஏற்றிச் செல்கின்றனர். நதியின் நடுப்பகுதிக்குச் சென்றதும், கேன்களைத் திறந்து சுமார் 165 லிட்டருக்கும் அதிகமான நெய்யை நதியில் ஊற்றுகின்றனர். அந்த நெய் நதியின் மேற்பரப்பில் ஒரு அடர்த்தியான படலமாகப் படர்வது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கான காரணங்களாக அவர்கள் முன்வைப்பவை: நெய் தண்ணீரை விட அடர்த்தி குறைவானது என்பதால், அது நீரின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய படலமாகப் படிந்துவிடும். இது காற்றில் உள்ள ஆக்சிஜன் தண்ணீருக்குள் செல்வதைத் தடுக்கும். தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவதால், மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் மூச்சுத்திணறி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

புனிதத்தின் அடையாளமாகக் கருதப்படும் கங்கை நதியை, வழிபாட்டு முறைகள் என்ற பெயரில் மாசுபடுத்துவது நதியின் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தச் செயல் குறித்த கருத்துகள் இணையத்தில் இரண்டு பிரிவாகப் பிரிந்துள்ளன. ஒரு தரப்பினர் இது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் பாரம்பரியமான சடங்கு என்று வாதிடுகின்றனர். ஆனால், பெரும்பான்மையான மக்கள் இதனை “அறிவுக்கண்ணற்ற பக்தி” என்று சாடுகின்றனர்.

“மதத்தின் மீது மரியாதை இருப்பது அவசியம், ஆனால் இயற்கையை அழிக்கும் எந்தவொரு செயலும் மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படக் கூடாது” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கங்கை நதியைத் தூய்மைப்படுத்தக் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படும் நிலையில், இதுபோன்ற செயல்கள் மீண்டும் நதியை அசுத்தமாக்குவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் முன்னதாக இதேபோன்று நதியில் பாலை லிட்டர் கணக்கில் ஊற்றிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது நெய்யை ஊற்றியுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.