மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கர்மாட் பகுதியில், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்த 27 வயது இளம்பெண் பூஜாவை, அவரது கணவர் சத்யம் காவண்டே பட்டப்பகலில் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்குத் திருமணம் நடந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக பூஜா தனது கணவரைப் பிரிந்து கர்மாட் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெட்ரோல் பங்கிற்கு வந்த சத்யம், மறைத்து வைத்திருந்த கத்தியால் பூஜாவைத் தாக்கியதோடு, தடுத்தவர்களையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த ஒட்டுமொத்த கொடூரச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த பூஜாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்கப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கச்னர் பகுதியில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் மறைந்திருந்த சத்யத்தை, சினிமா பாணியில் விரட்டிச் சென்று போலீசார் கைது செய்தனர்.
உயிரிழந்த பூஜாவிற்கு அவரது முதல் கணவர் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத் தகராறில் ஒரு இளம்பெண் துடிதுடிக்கக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
