முன்னணி ஐடி நிறுவனமான ஒரேகல் உலகம் முழுவதும் சுமார் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள சம்பவம் தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல ஊழியர்களுக்கு விடியற்காலையில் “நாளை முதல் வேலைக்கு வர வேண்டாம்” என்று மின்னஞ்சல் அனுப்பப்பட்டது பலரையும் கலங்க வைத்துள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் 14 ஆண்டுகளாக ஒரேகலில் பணியாற்றி வேலையை இழந்த ஒரு ஊழியரின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. வேலையை இழந்த பதற்றமோ, பயமோ இன்றி அவர் தனது சொந்த ஊரான புவனேஸ்வரிற்குத் திரும்பி, தற்போது ஒரு கேப் டிரைவராகத் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவரது நண்பர் சத்யா நாயக் வெளியிட்டுள்ள பதிவில், அந்த ஊழியர் தனது ஐடி வேலையின் போது செய்த புத்திசாலித்தனமான சேமிப்பைப் பாராட்டியுள்ளார். போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகளில் நிலையான வைப்பு நிதி (FD) மூலம் அவருக்கு மாதம் ரூ.43,000 வரை வட்டி வருமானமாக மட்டுமே கிடைக்கிறது.
சொந்த வீடு இருப்பதால் EMI சுமை எதுவுமில்லாமல், தற்போது தனது விருப்பப்படி கார் ஓட்டி மாதம் ரூ.50,000 வரை சம்பாதித்து வருகிறார். “நவீன கால முதலீட்டு மோகத்தில் விழாமல், பழைய கால முறைப்படி பணத்தைச் சேமித்ததால் இன்று வேலை போனாலும் நிம்மதியாக இருக்கிறேன்” என்ற அந்த ஊழியரின் அனுபவம், தற்போதைய ஐடி ஊழியர்களுக்குச் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
