அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த புதன்கிழமை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஈரான் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு உலக நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் காலத்தின் போது கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது.
தற்போது போர் நிறுத்தப்பட்ட பின்னரும், அந்த வழித்தடத்தின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஈரான் மறுத்துவிட்டது. இந்த வழியாக ஒரு நாளைக்கு 15 கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும் என்று ஈரான் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்த பிடிவாதமான முடிவால் உலகளவில் எரிசக்தி நெருக்கடி தீருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக விநியோகம் சீராகாத வரை கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நீடிக்கும் என்பதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்த்த இந்தியாவிற்கு ஈரானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
