அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் அந்த நாடுகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக அமைந்ததோடு, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களும் சேதமடைந்தன.
இந்தப் போரில் அமெரிக்கா அதிகப்படியான பணத்தைச் செலவிட்ட நிலையில், போரின் தீவிரம் குறையாததைக் கண்டு பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மூலம் தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், போர் நிறுத்தத்தின் அடுத்த நாளே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கப் படைகள் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அவை தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை அமெரிக்கப் படைகள் அந்தப் பிராந்தியத்தை விட்டு வெளியேறாது என்றும், மத்திய கிழக்கில் உள்ள போர்க்கப்பல்கள் அங்கேயே நிலை நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். ஈரானைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபாவாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கியூபாவுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் ஈரான் உடனான தற்காலிக போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா தனது கவனத்தைக் கியூபா பக்கம் திருப்புமா என்பது உலக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
