ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் நந்தவரம் கிராமத்தில் மது அரக்கனால் ஒரு குடும்பமே சிதைந்து போயுள்ளது. மதுவுக்கு அடிமையான வெங்கண்ணா என்பவர், தனது மனைவி வெங்கட லட்சுமம்மாவுடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற வெங்கண்ணா, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து மனைவியை கண்மூடித்தனமாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த மனைவியின் சடலத்தை வீட்டிற்குள்ளேயே போட்டு பூட்டிவிட்டு, எதுவுமே தெரியாதது போல அவர் தலைமறைவாகிவிட்டார். வெங்கண்ணாவின் வீட்டிலிருந்து நேற்று மாலை கடும் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு வெங்கட லட்சுமம்மா அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
மனைவியை கொன்றுவிட்டு மூன்று நாட்களாக தலைமறைவாக இருக்கும் வெங்கண்ணாவை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மதுவால் ஏற்பட்ட இந்த விபரீத கொலை சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
