பிரபல ஹாலிவுட் தொடரான ‘பிரண்ட்ஸ்’ மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகர் மேத்யூ பெர்ரி, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்திற்குக் காரணமாகக் கூறப்படும் ‘கெட்டமைன்’ எனும் போதைப்பொருள் விநியோக வழக்கில், தற்போது முக்கியத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‘கெட்டமைன் ராணி’ என்று அழைக்கப்படும் ஜாஸ்வீன் சங்கா என்ற பெண்மணிக்கு, மேத்யூ பெர்ரியின் மரணத்திற்கு வழிவகுத்த போதைப்பொருட்களை வழங்கியதற்காகவும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காகவும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாஸ்வீன் சங்காவுடன் இணைந்து மேத்யூவின் உதவியாளர் மற்றும் இரண்டு மருத்துவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஜாஸ்வீன் சங்கா, மேத்யூ பெர்ரிக்கு அதிக அளவிலான கெட்டமைன் டோஸ்களை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ததும், அவரது வீட்டில் இருந்து ஏராளமான போதைப்பொருள் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மேத்யூ பெர்ரியின் மரணத்திற்குப் பின்னரும் ஜாஸ்வீன் எந்தவித வருத்தமும் இன்றி தனது போதைப்பொருள் விற்பனையைத் தொடர்ந்ததாகக் கூறி, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களின் அடிப்படையில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.