திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். “பச்சோந்தியை விட வேகமாக காவி நிறத்திற்கு மாறியவர் பழனிசாமி” என்று சாடிய அவர், பாஜகவின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
இது குறிப்பாக, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற விவகாரங்களில் அதிமுக எடுத்த முடிவுகளைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் தமிழகத்தின் நலனுக்காக டெல்லியை எதிர்த்து நின்றதில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பாஜக அரசு இழைக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்க எடப்பாடி பழனிசாமிக்குத் துணிவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்தார். திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசியபோது அமைதி காத்தவர், தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கூட்டணியில் இல்லை என்று நாடகமாடுவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலின் போது கூட்டணியை விட்டு வெளியேறியதாகக் கூறியவர்கள், இப்போது மீண்டும் காவி நிறத்திற்குத் தாவி வருவதாகவும், இத்தகைய அரசியல் நிலைப்பாடுகள் பழனிசாமியின் இரட்டை வேடத்தையே காட்டுவதாகவும் முதலமைச்சர் தனது உரையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.
