மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் காணாமல் போன கணவரைத் தேடி அலைந்த பெண்ணிடம், மாந்திரீகம் செய்வதாகக் கூறி போலி சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025 அக்டோபர் மாதம் முதல் கணவரைத் தேடி வந்த அந்தப் பெண், மிகுந்த மன உளைச்சலில் இருந்தபோது தாகிர் ரஷீத் பேக் என்ற நபரைச் சந்தித்துள்ளார்.
நான் ஒரு பெரிய மாந்திரீகவாதி என்றும், தனது சக்தியால் சில நாட்களிலேயே கணவரை வரவழைத்து விடுவதாகவும் அந்தப் பெண்ணை நம்ப வைத்த அந்த நபர், மாந்திரீகச் சடங்குகளின் பெயரால் அப்பெண்ணைப் பயமுறுத்திப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அந்தப் பெண் துணிச்சலுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, சக்கர்தரா போலீசார் அதிரடியாகச் செயல்பட்டுத் தாகிர் ரஷீத் பேக்கை அஞ்சன்காவ் பகுதியில் வைத்துக் கைது செய்தனர். அந்தப் போலி சாமியார் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த நபர் இதேபோல் வேறு பெண்களையும் ஏமாற்றிப் பாதிக்கச் செய்துள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்தி இழைக்கப்பட்ட இந்த அநீதி அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
