பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப் பதற்றத்தைத் தணிக்க சீனாவில் நடைபெற்ற ஆறு நாள் அமைதிப் பேச்சுவார்த்தை எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. அண்டை நாடுகளுக்கு இடையே போர்நிறுத்தம் மற்றும் அமைதியை ஏற்படுத்த சீனா எடுத்த இந்த முயற்சியில், தலிபான் அரசு பாகிஸ்தானின் கோரிக்கைகளை நிராகரித்ததுடன், பயங்கரவாதத்திற்கான வரையறை என்னவென்று பாகிஸ்தானிடமே கேள்வி எழுப்பியது.

இது குறிப்பாக, தெஹ்ரீக்-ஈ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பிற்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டிய நிலையில், அது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்று தலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, எல்லையாகக் கருதப்படும் ‘டியூரண்ட் கோட்டை அங்கீகரிக்க தலிபான் அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்தது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது.

மேலும் சீனா, துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் சமரசம் செய்ய முயன்றாலும், எல்லைப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் குறித்த இரு நாடுகளின் மாறுபட்ட நிலைப்பாடுகளால் அமைதி என்பது தற்போதைக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.